அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் 

திருவல்லிக்கேணி, சென்னை

parthasarathy_temple


சுவாமி : பார்த்தசாரதி, வேங்கடகிருஷ்ணர்.

அம்பாள் : ருக்மனி, ஸ்ரீ தேவி, பூதேவி.

தீர்த்தம் : கைரவிணிபுஷ்கரிணி.

தலவிருட்சம் : மகிழ மரம்.

தலச்சிறப்பு : இக்கோவிலில் எங்கும் இல்லாத சிறப்பாக மூலவர் மீசையுடன்  காணப்படுகிறார்.   திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கு ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய்  அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில்  கத்தியோடு சலக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார்.   வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர்.

வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும்  உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார்.  ருக்மணி தேவியின்  வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார்.  வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம்  தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும்  காட்சி தருகிறார்கள். சன்னதிக்கு அருகே நின்று கைகூப்ப, மனம் கிரங்கும்.

பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணெய், மிளகாய் சேர்ப்பதில்லை.  இதற்கு பதிலாக  நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது.  வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து  ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல்  தரிசிக்கலாம்.  உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும்  போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

தல வரலாறு : சுமதி என்கின்ற மன்னன் பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான்.  பாரதப்  போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு.   ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டும் என்று இறைஞ்சிக் பெருமாளை கேட்டுக் கொண்டான்.  ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்திற்கு போக வேண்டுமானால் பல மலைகள், பல காடுகள் தாண்டி செல்ல  நேரிடும் என்பதை நினைத்து வருந்தினான்.

சுமதி மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள் பிருந்தாரண்யம் (திருவல்லிக்கேணி) என்ற  துளசிக்காடு (பிருந்தா - துளசி, ஆரண்யம் - காடு) இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் தான் காட்சி  அளிப்பதாக கூறினார். சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய்  இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான்.  பின் கோவிலும் எழுப்பியதாக வரலாறு.

ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம்  மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது.  என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட,  ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது.  அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த  இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில்  ஆறுதல் சொன்னதாக செவிவழிச் செய்தி உண்டு.

ஒயில் நிறைந்த இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில்  மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.  அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த  விரலில் நகம் இருக்காது.  பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு  கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள்.  பார்த்தசாரதியின் இடுப்பில்  யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

பாடியோர் : திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், ஸ்ரீராமானுஜர், திருமங்கையாழ்வார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

சித்திரை மாதம் - பிரம்மோற்சவம்,

ஆனி மாதம் - நரசிம்மர் பிரம்மோற்சவம்,

ஆடி மாதம் - பௌர்ணமி மறுதினம் உற்சவரின் தங்ககவசம் கலைந்து திருமஞ்சனம் நடைபெறும்,

ஆவணி மாதம் - ஸ்ரீ ஜெயந்தி,

புரட்டாசி – அணைத்து சனிக்கிழமைகளில் விசேஷம்,

மார்கழி – பகல்பத்து, வைகுண்டஏகாதசி, இராப்பத்து திருவிழா,

மாசி மாதம் – தெப்ப உற்சவம். 

அருகிலுள்ள நகரம் : சென்னை.

கோயில் முகவரி : அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,

திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

 

  1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  
Nearby Temple
கபாலீஸ்வரர் 
3.2km

வடபழனி முருகன் 
8.2Km

சாய் பாபா 
11.4Km
அஷ்டலக்ஷ்மி 
10.2Km
திருவாலீஸ்வரர் 
15Km
கரு மாரியம்மன் 
20.8Km